பருத்தித்துறையில் உள்ள ஒரு நூற்றாண்டுக்கும் அதிக காலத்தைக் கொண்ட வெளிச்ச வீட்டை படையினரிடமிருந்து மீட்டு மக்கள் பாவனைக்குத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவிற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 

பருத்தித்துறை முனைப்பகுதியில் அமைந்துள்ள வெளிச்சவீட்டினை மீனவர்கள் பாவனைக்கு அனுமதிக்குமாறு மீனவர்கள் சங்கத்தால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பருத்தித்துறையில் போர்த்துக்கேயர் காலத்தில் 1916ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த வெளிச்சவீடானது 105 அடி உயரத்தைக் கொண்டது.

வடமராட்சியிலுள்ள ஒரேயொரு வெளிச்சவீடு இதுவாகும்.

பருத்தித்துறையின் அடையாளமும் வரலாற்று சிறப்புமிக்கதுமான இந்த வெளிச்ச வீட்டை கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இராணுவம் ஆக்கிரமித்துத்துள்ளது.

இராணுவ ஆக்கிரமிப்பிற்கு முன்னரான காலப்பகுதியில்இந்தக் கலங்கரை விளக்கின் உதவியுடனனேயே இப்பகுதி மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே வெளிச்சவீட்டை உடனடியாக மக்கள் பாவனைக்கு அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ஏன மீனவர்சங்கத்தால் கோரிக்கை வைக்கப்பட்டதற்கு பதில் அளிக்குமுகமாக

அங்கஜன் இராமநாதனால், இது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் கதைத்து விரைவில் வெளிச்சவீட்டை பொதுமக்கள் பாவனைக்கு விட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முயற்சிப்பதாக இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

tamilvalam